காஜாங், நவ 20: கடந்த வெள்ளிக்கிழமை செமினியில் நடத்தப்பட்ட மூன்று தனித்தனி சோதனைகளில் RM499,974 மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அதன் விநியோகத்தை காவல்துறையினர் முடக்கினர்.
கஞ்சா வகை போதைப்பொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இறால் விற்பனையாளர் ஒருவரையும் அவரது மனைவி மற்றும் 29 முதல் 39 வயதுக்குட்பட்ட இரு ஆண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர் என காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்.
காஜாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், "மூன்று ஆண் சந்தேக நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதை பொருள் உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது," என்று அவர் கூறினார்.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39 B இன் கீழ் விசாரணைக்காக இரண்டு சந்தேக நபர்கள் நவம்பர் 21 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட கணவன் மற்றும் மனைவி மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்றார்.
இந்த போதை பொருட்கள் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள சந்தைகளில் விநியோகிக்கப்படுவதாக நம்பப்படுகிறது என்றும் இது 94,000க்கும் அதிகமான பயனர்களுக்கு வழங்கப் படலாம் என்றும் அவர் கூறினார்.
– பெர்னாமா


