கோத்தா பாரு,நவ 18: இன்று பாசிர் மாஸில் உள்ள கம்போங் தாசேக் பாகோங்கில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து இறந்து கிடந்தார்.
இச்சம்பவம் குறித்து காலை 6.52 மணிக்கு அழைப்பு வந்ததை அடுத்து, ஆறு பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ரந்தாவ் பஞ்சாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் சப்வி சத்பா தெரிவித்தார்.
"பஹ்ரோம் இஸ்மாயில் (64) என அடையாளம் காணப்பட்ட அந்நபர், சம்பவ இடத்திலே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று சப்வி கூறினார்.
இச்சம்பவத்தின் போது குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முயன்றனர். ஆனால் கிணற்றின் ஆழம் ஐந்து மீட்டர் என்ற காரணத்தால் காப்பாற்ற முடியாமல் போனதாக அவர் கூறினார்.
- பெர்னாமா


