ஷா ஆலம், நவ. 16- அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்களில் கல்வியைத் தொடரும் குறைந்த வருமானம் கொண்டு பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அடுத்தாண்டும் தொடரவிருக்கிறது.
பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு 5,000 வெள்ளியும் டிப்ளோமா கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு 3,000 வெள்ளியும் ஒரு முறை மட்டுமே என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த கல்விக் கட்டண உதவித் தொகை நேரடியாக சம்பந்தப்பட்ட உயர்கல்விக் கூடங்களுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தர்.
இந்திய சமூகத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் நலன் தொடர்ந்து காக்கப்படுவதை உறுதி செய்ய இந்திய சமூக கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இரு முதன்மை திட்டங்கள் அடுத்தாண்டும் தொடரும்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேருந்து கட்டண உதவித் திட்டம் மற்றும் பி40 தரப்பு உயர்கல்வி மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவித் திட்டம் ஆகிய இவ்விரு திட்டங்களையும் அமல்படுத்துவதற்கு மாநில அரசு 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 11 லட்சத்து 85 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று நேற்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அமிருடின் தெரிவித்தார்.
மாதம் 2,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களை இலக்காக கொண்டு இந்த பள்ளி பேருந்து கட்டணத் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதி உள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு 300 வெள்ளி பள்ளி பேருந்துக் கட்டணமாக வழங்கப்படும்.








