கோலாலம்பூர், நவ. 16- சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு 2025 (சிப்ஸ்) அடுத்தாண்டு அக்டோபர் 8 முதல் 11 வரை ஒரே வாரத்தில் கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடத்தப்படும்.
வலுவான அடித்தளம் காரணமாக கடந்த கால வெற்றிகளைத் தொடர்வதற்குரிய சிறப்பான நிலையை அந்த மாநாடு கொண்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வர்த்தக செழிப்பு, கூட்டுறவின் விரிவாக்கம் மற்றும் புத்தாக்கம் புதிய உயரத்தை அடைவதற்கான வாய்ப்பினை வழங்கக்கூடிய கலங்கரை விளக்கமாக இந்த சிப்ஸ் மாநாடு விளங்குவதை தாங்கள் உறுதி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தொலைநோக்கை மனதில் கொண்டு 2025ஆம் ஆண்டு சிப்ஸ் மாநாடு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரே வடிவில் கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் அக்டோபர் 8 முதல் 11 வரை ஒரே வாரத்தில் நடைபெறும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என நம்புகிறேன். அடுத்தாண்டும் உங்களின் பங்கேற்பை பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்று இங்குள்ள மெஜிஸ்டிக் ஹோட்டலில் நேற்றிரவு நடைபெற்ற 2024 சிப்ஸ் பாராட்டு விருந்து நிகழ்வில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் 400 ஆக இருந்த கண்காட்சிக் கூடங்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 148.5 விழுக்காடு அதிகரித்து 994 ஆக உயர்வு கண்டது இந்த மாநாட்டின் வளர்ச்சிக்கான சிறந்த சான்றாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
அதே சமயம், அக்காலக்கட்டத்தில் பரிவர்த்தனை வாய்ப்பு மதிப்பும் 18.2 கோடி வெள்ளியிலிருந்து 1,386 கோடி வெள்ளியாக அபரிமித உயர்வு கண்டதும் இந்த மாநாட்டின் வெற்றியைப் புலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றார் அவர்.








