ஷா ஆலம், நவ. 15 - தொழிற்சாலை மற்றும் சேவைத் துறைகளில் செய்யப்பட்ட முதலீடுகளின் வாயிலாக சிலாங்கூரில் 31,055 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 3,500 கோடி வெள்ளி மதிப்பிலான 822 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அந்த முதலீடுகளில் 2,242 கோடி வெள்ளி மதிப்பிலான திட்டங்கள் உள்நாட்டிலிருந்தும் 1,255 கோடி வெள்ளி மதிப்பிலான திட்டங்கள் வெளிநாடுகளிலிருந்தும் பெறப்பட்டதாக அவர் சொன்னார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை நாட்டின் முக்கிய முதலீட்டு மையங்களில் ஒன்று என்ற பெருமையை சிலாங்கூர் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
சேவைத் துறையில் 2,764 கோடி வெள்ளி மதிப்பிலான 666 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட வேளையில் அதன் மூல 23,366 வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்குரிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது என்று மாநில சட்டமன்றத்தில் இன்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.
அதற்கு அடுத்து தொழிற்சாலை துறையில் 733 கோடி வெள்ளி மதிப்பிலான 155 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு 7,673 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்றார் அவர்.
இது தவிர முதன்மை துறைகளில் 245,000 வெள்ளி மதிப்புள்ள முதலீடுகள் பெறப்பட்ட வேளையில் இதன் மூலம் 16 வேலை வாய்ப்புகள் பெறப்பட்டன என்று அவர் சொன்னார்.


