வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தை எதிர்கொள்வதற்கான தயார் நிலையின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்ட ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாரத்திற்கு குறைந்தது ஐந்து முறை ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஏபிஎம் தலைமை ஆணையர் டத்தோ அமினுர்ரஹீம் முகமது கூறினார்.
கடந்த 10 மாதங்களில் நாங்கள் நாடு முழுவதும் 30,000 க்கும் மேற்பட்ட ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சாத்தியம் உள்ள 2,000 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உட்பட தொடர்புடைய அதிகாரிகளுக்குப் புகாரளித்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்
பூலாவ் மெராந்தியில் உள்ள மலேசிய சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு தளத்தில நேற்று நடைபெற்ற 2024/2025 வடகிழக்கு பருவ மழை தொடர்பான அரசாங்க முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் அமர்வுக்குப் பிறகு அமினுர்ரஹீம் செய்தியாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கும் அதே வேளையில் நீர் மற்றும் காற்று மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் கண்காணிக்கிறது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், முன்னதாக கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் தலைமை இயக்குநர் டத்தோ கைருல் ஷாரில் இட்ருஸ், நாடு முழுவதும் 4,619 வெள்ள அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சொன்னார்.
தீபகற்ப மலேசியாவில் 3,605 இடங்களும் சபாவில் 799 இடங்களும் சரவாக்கில் 201 இடங்களும் லாபுவானில் 14 இடங்களும் இதில் அடங்கும் என்றார் அவர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது மூன்று வெள்ள முறை வெள்ளத்தை சந்தித்த இடங்களின் அடிப்படையில் ஹாட் ஸ்பாட் பகுதிகள் தீர்மானிக்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.







