ஈப்போ, நவ. 9- சுற்றுலா பேருந்து மற்றும் டிரெய்லர் லோரி சம்பந்தப்பட்ட
விபத்தில் நான்கு பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் வடக்கு-தெற்கு
நெடுஞ்சாலையின் (பிளஸ்) 295.4வது கிலோ மீட்டரின் தெற்கு நோக்கிச்
செல்லும் தடத்தில் கோப்பெங் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் இன்று அதிகாலை 4.03 மணியளவில் தாங்கள்
அவரச அழைப்பைப் பெற்றதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர்
அகமது கூறினார்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைவதற்குள் பயணிகள்
அனைவரும் விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து வெளியேறி விட்டதாக
அவர் சொன்னார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மூன்று பெண்களும் ஒரு
சிறுமியும் லேசான காயங்களுக்குள்ளானது கண்டறியப்பட்டது என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த பேருந்து மொத்தம் 41 சுற்றுப்பயணிகளை ஏற்றிக் கொண்டு
மலாக்காவிலிருந்து கெடா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த
விபத்து நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.
சம்பவ இடத்தை அடைந்த போது அந்த பேருந்து டிரெய்லர் லோரியின்
பின்புறம் மோதியது. இதனால் அந்த பேருந்தின் முன்பகுதி
சேதமடைந்தது என்றார் அவர்.
இந்த விபத்தில் டிரெய்லர் மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு காயம்
ஏற்படவில்லை எனக் கூறிய அவர், காயமடைந்த பயணிகள்
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்றார்.








