கோலாலம்பூர், நவ. 9- பச்சைக் குத்திய ஆடவரின் உடல் கிள்ளான் ஆற்றில் மிதந்து வரக் கண்டு பிடிக்கப்பட்டது. பண்டார் சன்வே, புக்கிட் தண்டாங் பிஜேஎஸ்1 பகுதிக்கு அருகே அவ்வாடவரின் சடலத்தை பொது மக்கள் கண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
மேல் சட்டையின்றி ஜீன்ஸ் மட்டுமே அணிந்த நிலையில் காணப்பட்ட ஆடவரின் உடல் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் நேற்று முன்தினம் இரவு 10.25 மணியளவில் பொது மக்களிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.
அந்த ஆடவரின் உடலில் அடையாள ஆவணங்கள் எதுவும் காணப்படவில்லை என்பதோடு உடலின் பல பாகங்களில் பச்சைக் குத்தப்பட்டதற்கான அடையாளமும் தென்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அந்த உடலின் இடது பக்க கழுத்தில் நட்சத்திர வடிவில் பச்சைக் குத்தப்பட்டிருந்தது. இடது கையில் ‘நோ மணி, நோ ஹனி‘ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும், இடது மணிக்கட்டில் கத்தியின் படமும் வரையப்பட்டிருந்த து என்று அவர் சொன்னார்.
அந்த உடலில் சவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மரணத்திற்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் அறிக்கை தெரிவித்தார்.
தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அறிமுகமானவர்கள் காணாமல் போயிருந்தால் இந்த விசாரணைக்கு உதவும் பொருட்டு உடனடியாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.








