கோல சிலாங்கூர், நவ. 9- வெள்ளத்தைச் சமாளிக்க ஜப்பானில்
அமல்படுத்தப்பட்டுள்ளதைப் போல் நிலத்தடி சுரங்கப் பாதையை
அமைப்பதற்கான திட்டத்தை சிலாங்கூர் அரசு வரைந்து வருகிறது.
நாட்டில் வெள்ளப் பிரச்சினைக்குத் நீண்ட கால அடிப்டையில் தீர்வு
காண்பதற்கான முன்னெடுப்பாக இந்த அணுகுமுறை விளங்குகிறது என்று
அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம்
கூறினார்.
இந்த சுரங்கப் பாதை திட்டம் ஜப்பானிலுள்ள கவாசாக்கி மற்றும்
சைத்தாமா ஆகிய இரு நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய
அவர், மழை நீர் நேரடியாக சுரங்கப் பாதைக்கு வழிந்தோடும் வகையில்
இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
வழக்கத்திற்கு மாறாக பெய்யக்கூடிய மழையின் போது பெருக்கெடுக்கும்
நீரை உட்கிரகிக்கும் ஆற்றல் சிலாங்கூரிலுள்ள ஆறுகளுக்கு கிடையாது.
இந்த சுரங்கப் பாதைத் திட்டம் கோலாலம்பூரையும் உள்ளடக்கியுள்ளது
என்று அவர் சொன்னார்.
காரணம், கோலாலம்பூரில் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் நீர் ஆறுகள்
வழியாக வழிந்தோடி சிலாங்கூரில் வெள்ளத்தை ஏற்படுத்தி விடுகிறது
என்று அவர் குறிப்பிட்டார்.
பெஸ்தாரி ஜெயா, ஜாலான் ரந்தாவ் பாஞ்சாங்கில் நேற்று நடைபெற்ற
மூல நீர் ஆதாரத் திட்ட ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
விரிவான ஆய்வு மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்காக இந்த பரிந்துரை இயற்கை வளம் மற்றும்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சிடம் சர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும்
அவர் சொன்னார்.
இந்த நிலத்தடி சுரங்கப் பாதைத் திட்டத்தை மேற்கொள்வதற்கு 600 கோடி
வெள்ளி வரை தேவைப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்டு வரும் வெள்ளப் பேரிடர்
பிரச்சினைக்கு இதன் மூலம் தீர்வு காண முடியும் என நாங்கள்
எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து நாம் யோசிக்க வேண்டிய
கட்டாயத்தில் உள்ளோம் என்றார் அவர்.








