மிரி, நவ. 5- இங்குள்ள ஜாலான் கிராண்ட் பார்க்கில் உள்ள மாடி வீட்டில் ஏற்பட்டத் தீவிபத்தில் சீனப் பிரஜையான பதின்ம வயதுப் பெண் கருகி மாண்டார்.
அந்த வீட்டில் 70 விழுக்காட்டுத் தீக்காயங்களுடன் அந்த 13 வயதுப் பெண் இறந்து கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக சரவா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையப் பேச்சாளர் கூறினார்.
இந்த தீச் சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 3.06 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து லோப்பேங் மற்றும் மிரி தீயணைப்பு நிலையங்களிலிருந்து 12 உறுப்பினர்கள் இரு தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்தாக அவர் சொன்னார்.
சுமார் பத்து நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்த அவர்கள் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
அந்த இரட்டை வீடுகளில் ஒன்றில் உள்கூரை மட்டும் தீயில் சேதமடைந்தது என்று அவர் குறிப்பிட்டார். இத்தீவிபத்தில் இறந்த இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.








