பாலிக் பூலாவ், நவ. 3- இங்குள்ள ஜாலான் பெசார் புலாவ் பெத்தோங்கில் உள்ள டுரியன் தோட்டத்தில் மனிதருடையது என நம்பப்படும் எலும்புக்கூடு வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக தென்மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சசாலி ஆடாம் தெரிவித்தார்.
மலைச்சரிவில் அமைந்துள்ள டுரியன் பழத்தோட்டத்தில் பல எலும்புகள் மற்றும் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் நேற்று மதியம் 12.35 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாக சசாலி கூறினார்.
சம்பவம் நடந்த இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மண் குவியலில் சில எலும்புகள் மற்றும் எலும்புக்கூடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே இடத்தில் உடைந்த தொலைபேசி பாகங்கள், கோப்பைகள், கம்பி சுருள்கள், உலோக பானைகள் மற்றும் உடைந்த மின்விசிறி துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் இன்று பெர்னாபா தொடர்பு கொண்டபோது கூறினார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய எலும்புகள் மற்றும் எலும்புக்கூடு பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தடயவியல் அறிக்கையின் முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.








