கோத்தா பாரு, நவ. 3- பொது நடவடிக்கைப் படையின் (பி.ஜி.ஏ.) தென்கிழக்கு பிராந்திய பட்டாள உறுப்பினர்கள் தும்பாட், கம்போங் லாவுட்டில் நேற்று மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 32 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 216,000 யாபா போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்த கிராமத்திலுள்ள ஆற்றின் கரையில் எட்டாவது படைப்பிரிவின் வீரர்கள் நேற்றிரவு 10.00 மணியளவில் மேற்கொண்ட சோதனையில் அந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பி.ஜி.ஏ. தென் கிழக்கு பிராந்தியத்தின் கமாண்டர் எஸ்ஏசி டத்தோ நிக் ரோஸ் அஸான் அப்துல் ஹமிட் கூறினார்.
போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட பி.ஜி.ஏ. உறுப்பினர்கள் அங்கிருந்த இரு நபர்களின் நடமாட்டம் மீது சந்தேகம் கொண்டனர்.
அதிகாரிகளின் வருகையை உணர்ந்த அவ்விரு ஆடவர்களும் அங்கிருந்து தப்பியோடினர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 25 கிலோ எடை கொண்ட 216,000 யாபா போதை மாத்திரைகள் அடங்கிய சில அட்டைப் பெட்டிகளை கண்டனர். இந்த போதை மாத்திரைகள் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் தும்பாட் மாவட்ட போலீஸ் நிலையத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கூறிய அவர், இந்த சம்பவம் தொடர்பில் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.








