காஜாங், நவ. 3 - சிலாங்கூரிலுள்ள ஏறக்குறைய 138,000 அடுக்குமாடி குடியிருப்புகள் சொத்து மற்றும் சொத்து மதிப்பை பாதிக்கும் உரிமைச் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளன.
கடந்த 20 முதல் 30 ஆண்டுகளாக உரிமையாளர்களை பெரிதும் பாதித்து வரும் வரும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புகள் இம்மாதம் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் 2025 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நிலப்பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு முன்பாகவே திட்டமிடல் அனுமதி வழங்கப்பட்ட காரணத்தால் இந்த சிக்கல் எழுந்தது. இது சில மேம்பாட்டாளர்கள் பணம் செலுத்துவதைத் தவிர்க்கவும் புறக்கணிக்கவும் வழிவகுத்தது. நாளடைவில் அந்தப் பிரச்சினை குடியிருப்பாளர்கள் பக்கம் திரும்பியது. இறுதியாக ஒவ்வொரு குடியிருப்பாளரும் பணம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது என அவர் குறிப்பிட்டார்.
எனவே, நாங்கள் அதனைச் சரிசெய்து வருகிறோம். ஆனால் மாநில அரசு முழு செலவையும் ஏற்க முடியாது. ஏனெனில் நாங்கள் கடந்த கால பிரச்சனைகளைச் சுமக்கிறோம். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு உதவக்கூடிய உரிமையாளர்கள் அல்லது மேம்பாட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கான செயல்முறையை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று அவர் கூறினார்.
காஜாங் நகராண்மைக் கழக ஏற்பாட்டில் இங்குள்ள பங்சாபுரி பைடூரியில் நடைபெற்ற "காஜாங் ஸ்ட்ராட்டா ரேவாங்* எனும் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கான கூட்டு சமையல் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
வீடுகள் போன்ற சொத்துக்கள் உரிமையாளர்களுக்கு சரியான சொத்துகளாக மாறுவதை உறுதிசெய்ய இப்பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
சொத்து உரிமைக்கான அடிப்படை உரிமை இல்லாததால் பல உரிமையாளர்கள் பட்டா இல்லாமல் திணறுகிறார்கள். அவர்களது சொத்துக்களை விற்கக் கூட முடியாது. நில பிரீமியம், சட்டக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளதால் இதனைத் தீர்க்க உதவுவோம் என்றார் அவர்.
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு குழு ஒன்றை அமைக்கும்படி
சிலாங்கூர் வீட்டுடைமை மற்றும் சொத்து வாரியத்திற்கு கடந்த ஜூலை மாதம் மந்திரி புசார் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், குடியிருப்பாளர்கள் மிகவும் வசதியான வாழ்க்கையை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக அடுக்குமாடி குடியிருப்புகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடுகள் உள்ளிட்ட உதவிகளையும் அமிருடின் அறிவித்தார்.








