கோலாலம்பூர், அக். 31- சுங்கை பூலோ தாமான் பெரிண்டஸ்ட்ரியன் கே.ஐ.பி.யில் உள்ள டயர், பேட்டரிகள் மற்றும் பஹ்கி வண்டிகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு நேற்றிரவு ஏற்பட்ட தீயில் எரிந்து நாசமானது.
எனினும், இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
இநத தீவிபத்து தொடர்பில் நள்ளிரவு 12.54 மணிக்கு தீயணைப்பு வீரர்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூறிய அவர், அதிகாலை 2.07 மணிக்கு தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது என்றார்.
இந்த சம்பவத்தால் கிடங்கின் 85 விழுக்காட்டுப் பகுதி அழிந்துவிட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீயை அணைக்கும் நடவடிக்கையில் எட்டு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பங்கு கொண்டனர். அருகிலுள்ள 13 தன்னார்வ தீயணைப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் பொது தற்காப்புப் படை உறுப்பினர்களும் இப்பணியில் உதவினர் என்றார் அவர்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த இழப்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.



