தெமர்லோ, அக். 31-இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
பெருநாள் கால உச்சவரம்பு விலை திட்டத்தின் கீழ் உள்நாட்டு வர்த்தக
மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு நாடு முழுவதும் உள்ள 942
வர்த்தக வளாகங்கள் மீது அதிரடிச் சோதனையை நடத்தியது.
மொத்தம் 11 மொத்த வியாபார மையங்கள் மற்றும் 931 சில்லரை வர்த்தக
மையங்களை உள்ளடக்கிய இச்சோதனை கடந்த அக்டோபர் 28 முதல்
நேற்று வரை மேகொள்ளப்பட்டது.
இச்சோதனையின் போது விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத ஆறு
வர்த்தர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு 440 பொருள்கள்
பறிமுதல் செய்யப்பட்டு 900 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
உச்ச வரம்பு விலையைக் காட்டிலும் அதிக விலையில் பொருள்களை
விற்றது தொடர்பில் ஒரு வர்த்தகர் மீதும் இளஞ்சிவப்பு நிற சிறப்பு
விலைப்பட்டியலை வைக்கத் தவறியதற்காக ஐந்து வணிர்கள் மீதும்
நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் துணையமைச்சர் புஸியா சாலே
கூறினார்.
ஆகவே, கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களை வகைப்படுத்தும் இளஞ்சிவப்பு
நிற விலைப்பட்டியலை வைப்பதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட விலையை
பின்பற்றும்படி வர்த்தகர்களை கேட்டுக் கொண்ட அவர், இந்த
விதிமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றார்.
மெந்தகாப், பி.எஸ். பிரெஷ்மார்ட் பேரங்காடியில் 2024 தீபாவளி
பண்டிகைக்கான விலை உச்சவரம்புத் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பெருநாள் காலத்தில் அத்தியாவசியப் பொருளுக்கான தேவை அதிகரிக்கும்
என்பதால் அப்பொருள்களின் விலையை நிலைப்படுத்தும் நோக்கில் வரும்
நவம்பர் 3ஆம் தேதி வரை தீபாவளி சிறப்பு விலை உச்சவரம்புத் திட்டம்
அமல்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.








