புத்ராஜெயா, அக். 30- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை நாடு முழுவதும் 63,784 உணவகங்கள் மீது சோதனை மேற்கொண்ட சுகாதார அமைச்சு, சுத்தமின்மை காரணமாக 910 உணவகங்களை மூட உத்தரவிட்டது.
அக்காலக்கட்டத்தில் 1983ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் 32பி பிரிவின் கீழ் 16,415 குற்ற அறிக்கைள் வெளியிட்டப்பட்டதாக அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
மேலும் நாடு முழுவதும் உள்ள 94,275 உணவக பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் 79,818 பேர் அல்லது 84.7 விழுக்காட்டினர் டைபாய்டு எதிர்ப்பு ஊசியை பெற்றுள்ளது கண்டறியப்பட்டது என்று அது குறிப்பிட்டது.
இச்சோதனைகளின் போது சட்டவிதிகளை முறையாகப் பின்பற்றாத உணவக உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
சுத்தமில்லாத மற்றும் முறையாக பராமரிக்கப்படாத உணவகங்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 1983ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் கீழ் 14 நாட்களுக்கு உணவகத்தை மூட உத்தரவிடுவதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும்.
இந்த உத்தரவை மீறும் தரப்பினருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
உணவகங்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் இருக்கும்படி வாடிக்கையளர்களை சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டது. சுகாதார அமைச்சின் சுத்தம் தொடர்பான அங்கீகாரச் சின்னம் (பெஸ்) உள்ள உணவகங்களைத் தேர்ந்தெடுக்கும்படி அது கேட்டுக் கொண்டது.



