கோலாலம்பூர், அக். 30- நாளை தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று காலை 9.00 மணி நிலவரப்படி வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை (எல் பி.டி.) 1 மற்றும் 2, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (பிளஸ்) மற்றும் ஜொகூர் நோக்கிச் செல்லும் இ2 நெடுஞ்சாலை ஆகியவற்றில் போக்குவரத்து இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் (எல்.ஓல்.எம்.) பேச்சாளர் தெரிவித்தார்.
பிளஸ் நெடுஞ்சாலையில் பீடோர் முதல் தாப்பா, தாப்பாவிலிருந்து கோப்பேங் மற்றும் செபெராங் ஜெயா முதல் பிறை வரை போக்குவரத்து அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார்.
கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை, புத்ரா ஹைட்ஸிலிருந்து சீஃபீல்ட் வரையிலான இலிட் நெடுஞ்சாலையில் நெரிசல் காணப்படுகிறது.
இதற்கிடையில், வடக்கு நோக்கி செல்லும் டாமன்சாரா பூச்சோங் நெடுஞ்சாலையில் (எல்டிபி), பூச்சோங் உத்தாமாவிலிருந்து பூச்சோங் இந்தான் வரையிலும், பிஜேஎஸ் டோல் சாவடி முதல் கேபிள் பாலம் வரையிலும், கிளானா ஜெயா முதல் எஸ்எஸ்2 வரையிலும், பெஞ்சாலா டோல் சாவடி முதல் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் வரையிலும் போக்குவரத்து அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.
ஸ்பிரிண்ட் விரைவுச்சாலையில், மோன்ட் கியாரா சந்திப்பிலிருந்து காயூ ஆரா வரை போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.








