(ஆர்.ராஜா)
கிள்ளான், அக். 27- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளை சீரமைப்பதற்கு மாநில அரசு கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2 கோடியே 60 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அதோடு மட்டுமின்றி தோட்டப் புற மாணவர்களுக்கான பேருந்து கட்டண உதவித் திட்டத்திற்காக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 78 லட்சத்து 77 ஆயிரம் வெள்ளி மாநில அரசின் சார்பாக வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள லிட்டில் இந்திய செட்டி பாடாங்கில் நடைபெற்ற மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
மாணவர்கள் குறிப்பாக தோட்டப் புறங்களைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்குச் செல்வதில் எதிர்நோக்கும் சிரமத்தைக் குறைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் பயன் பெற்றதாக அவர் சொன்னார்.
இதுவே எங்களின் அணுகுமுறையாகும். இம்மாநிலத்திலுள்ள ஒவ்வொரு இனத்திற்கும் வெவ்வேறு தேவைகள் உள்ளன. சீன சமூகத்திற்கு சீன இடைநிலைப்பள்ளிகளை அதிகரிப்பதற்கான தேவை உள்ளது. பள்ளிகளை நிர்மாணிப்பதற்கான நிலங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் தேவையை நாங்கள் ஈடு செய்கிறோம்.
.அதே சமயம், இந்திய சமூகத்திற்கான தேவைகள் வேறு மாதிரியாக உள்ளன. கல்வி, அடிப்படை வசதிகள் தவிர பள்ளிக்குச் செல்வதில் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கலும் அதில் அடங்கும். சில வேளைகளில் நம்மைச் சுற்றியுள்ள சில சக்திகள் நமது பிள்ளைகள் கல்வி பெறுவதை தடுக்கவும் முற்படுகின்றன.
ஆகவேதான், மேம்பாட்டுத் திட்டங்களில் மாநில அரசு எப்போதும் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதன் அடிப்படையில் சிலாங்கூர் தொழில் மேம்பாட்டு மையம் (எஸ்.டி.டி.சி.) வாயிலாக தொழில்திறன் மற்றும் தொழில்நுட்ப கல்வியை இந்திய மாணவர்களுக்கு வழங்குவதற்கான சிறப்புத் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமூகத்தின் பல்வேறு நிலையிலான மக்களின் நலன் பேணிக் காக்கப்படுவதை உறுதி செய்ய இத்தகைய திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் சொன்னார்.








