கோலாலம்பூர், அக். 27- வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மற்றும் போட்டித் தன்மையை அதிகரிப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக சிலாங்கூரைச் சேர்ந்த 18,116 தொழில்முனைவோருக்கு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் கீழுள்ள பல்வேறு நிறுவனங்களின் வாயிலாக 110 கோடி வெள்ளி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
சஹாபாட் அமானா இக்தியார் வாயிலாக 14,406 பேருக்கு 12.64 கோடி வெள்ளியும் தெக்குன் நேஷனல் திட்டத்தின் மூலம் 3,324 தொழில்முனைவோருக்கு 7.31 கோடி வெள்ளியும் பேங்க் ராக்யாட் மூலம் 208 பேருக்கு 25 கோடியே 39 லட்சம் வெள்ளியும் வழங்கப்பட்டதாக தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் கூறினார்.
இது தவிர, எஸ்.எம்.இ. பேங்க் ராக்யாட் வாயிலாக 152 தொழில்முனைவோருக்கு 64.57 கோடி வெள்ளி வழங்கப்பட்டுள்ளது. பெர்னாஸ் பிரன்சாய்ஸ் தனியுரிமை நிதித் திட்டத்தின் கீழ் 26 நிறுவனங்களுக்கு 58 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
வணிகர்கள் மற்றும் கூட்டுறவுக் கழகங்களுக்கு உதவும் அமைச்சின் முயற்சியின் ஒரு பகுதியாக அமைச்சின் கீழுள்ள பல்வேறு துறைகளுக்கு 54 லட்சம் வெள்ளியை இன்று நான் வழங்குகிறேன் என அவர் சொன்னார்.
நேற்று சுங்கை பூலோ வில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு தொழில்துறை எனும் திட்டத்தின் மத்திய பிராந்தியத்திற்கான நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒரு மாவட்டத்திற்கு ஒரு தொழில்துறை திட்டம் குறித்து கருத்துரைத்த அவர், தங்கள் மாவட்டத்தின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் பொருட்களை சந்தைப்படுத்துவதற்குரிய சூழலை தொழில்முனைவோருக்கு வழங்குவதை இது நோக்கமாக கொண்டுள்ளது என்றார்.
மத்திய பிராந்திய நிலையிலான இந்த ஒரு மாவட்டத்திற்கு ஒரு தொழில்துறை எனும் திட்டத்தின் மத்திய பிராந்திய கண்காட்சியில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்த 50 தொழில்முனைவோர் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.








