ஷா ஆலம், அக். 19- இரு பெரும் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை குறைப்பது தொடர்பான அறிவிப்பை ஒற்றுமை அரசாங்கம் தனது 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்துள்ளது.
தேசிய கடன் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் அதிகப்படியான செலவினத்தைக் கட்டுப்படுத்துவது ஆகிய இரு நோக்கங்களின் அடிப்படையில் இலக்கிடப்பட்ட ரோன்95 பெட்ரோல் மற்றும் கல்விக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை குறைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ரோன்95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகைத் திட்டம் வரும் 2025ஆம் ஆண்டு மத்தியில் அமல்படுத்தப்படும். கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு வந்தப் பின்னர் ஒற்றுமை அரசாங்கம் மேற்கொள்ளும் குறிப்பிடத்தக்க நிதி சீர்திருத்தமாக இந்த நடவடிக்கை அமைகிறது என்று அவர் சொன்னார்.
தற்போது ரோன் 95 பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2.05 வெள்ளி விலையில் விற்கப்படுகிறது. இந்த ரக பெட்ரோல் தாய்லாந்தில் 5.85 வெள்ளியாகவும் சிங்கப்பூரில் 9.02 வெள்ளியாகவும் இந்தோனேசியாவில் 3.38 வெள்ளியாகவும் உள்ளது.
ரோன் 95 பெட்ரோலுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு அரசாங்கம் வழங்கிய உதவித் தொகையின் மதிப்பு 2,000 கோடி வெள்ளியாகும். இந்த உதவித் தொகையின் வழி பயன் பெற்றவர்களில் 40 விழுக்காட்டினர் பணக்காரர்கள் மற்றும் வெளி நாட்டினராவர்.
உண்மையில் உதவித் தேவைப்படுவோருக்கு இந்த மானியத் திட்டம் பலனளிப்பதை உறுதி செய்வதற்கும் வசதியாக உள்ள 15 விழுக்காட்டினர் இதன் மூல்ம் பயன் பெறுவதைத் தடுப்பதற்கும் இந்த உதவித் தொகை சீர்திருத்தம் அமல்படுத்தப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
இது தவிர கல்வியிலும் அரசாங்கம் சீர்திருத்தத்தைக் கொண்டு வருகிறது. வசதி குறைந்த குடும்பங்களுக்கு உருவாக்கப்பட்ட உறைவிடப் பள்ளிகளில் தற்போது 30 விழுக்காடு வரை பணக்காரர்களின் பிள்ளைகள் தங்கியுள்ளனர்.
முழு உறைவிடப் பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் அரசாங்கம் தற்போது ஆண்டுக்கு 15,000 வெள்ளியை உதவித்தொகை வழங்கி வருகிறது.
இத்தகைய உறைவிடப் பள்ளிகளில் பணக்காரர்களின் பிள்ளைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் சேமிப்புத் தொகை இதர மாணவர்களின் வசதிக்காக பயன்படுத்தப்படும்.








