கோலாலம்பூர், அக். 18- கூட்டரசு சாலைகளைப் பராமரிப்பதற்கும்
பாதுகாப்பற்ற சாலைகளால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையைக்
குறைப்பதற்கும் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 280 கோடி
வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலைச் சாலைகள், பெல்டா சாலைகள், தொழில்பேட்டைச்
சாலைகள் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகள்
உள்ளிட்ட சாலைகளில் பழுதுபார்ப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு
ஏதுவாக பிரத்தியேகமாக 100 கோடி வெள்ளி ஒதுக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அடுத்தாண்டு ஜி1 முதல் ஜி4 வரையிலான குத்தகையாளர்களுக்கு 45
கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இந்த ஒதுக்கீடு 30 கோடி
வெள்ளியாக இருந்தது என்று நாடாளுமன்றத்தில் இன்று 2025ஆம்
ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர்
தெரிவித்தார்.
இதனிடையே, மாரிஸ் எனப்படும் மலேசிய சாலை பதிவு தகவல்
முறையின் கீழ் மாநில சாலைகளை பராமரிப்பதற்கு 55 கோடி வெள்ளி
ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கால்வாய்கள், சாலையோரங்கள்
மற்றும் சுற்றுப்புறங்களை தரம் உயர்த்தும் பணிகளும் தொடர்ந்து
மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
இதனிடையே, நாடு முழுவதும் புதிய சாலைகள் மற்றும் விவேக
சாலைகளை நிர்மாணிக்க 17 கோடியே 80 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு
செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார்.








