ஷா ஆலம், அக். 18- ரஹ்மா ரொக்க உதவித் திட்டம் (எஸ்.டி.ஆர்.) மற்றும் ரஹ்மா அடிப்படை உதவித் திட்டம் (சாரா) ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தை அரசாங்கம் அடுத்தாண்டு உயர்த்தவுள்ளது.
அவ்விரு உதவித் திட்டங்களுக்கும் தற்போது 1,000 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ள வேளையில் அடுத்தாண்டு அந்த ஒதுக்கீடு 1,300 கோடி வெள்ளியாக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த நிதி அதிகரிப்பின் வழி 90 லட்சம் பேர் அதாவது நாட்டிலுள்ள பெரியவர்களில் 60 விழுக்காட்டினர் பயனடைவர் என்று அவர் சொன்னார்.
அடுத்தாண்டு தொடங்கி 41 லட்சம் எஸ்.டி.ஆர். பெறுநர்கள் மாதந்தோறும் 100 வெள்ளியை உதவித் தொகையாகப் பெறுவர். தற்போது 700,000 பேர் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.
சாரா உதவித் தொகை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி பெறுநர்களின் மைகார்டில் சேர்க்கப்படும். இந்த தொகையைக் கொண்டு அவர்கள் உணவு, பானங்கள், மருந்து, பள்ளி உபகரணங்கள் போன்ற பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள 600 பேரங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் இப்பொருள்களை அவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றார் அவர்.
சாரா உதவித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள திருமணமாகாதவர்கள் 600 வெள்ளியை உதவித் தொகையாகப் பெறுவர்.
இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கான வருமான வரம்பு மாதம் 3,700 வெள்ளியிலிருந்து 4,600 வெள்ளியாக உயர்த்தப்பட்டதன் விளைவாக இந்த திட்டத்திற்கு கூடுதலாக 300 வெள்ளி செலவு பிடிக்கிறது என்றார் அவர்.








