டுங்குன், அக். 13- இங்குள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் விபத்தில் உயிரிழப்பதற்கு காரணமான பெண்மணியின் தடுப்புக் காவல் நாளை தொடங்கி மேலும் இரு தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் நுர் அமிரா ஃபாத்திஹா ஓஸ்மான், 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த தடுப்புக் காவல் அனுமதியை வழங்கினார்.
அந்த பல்கலைக்கழகத்திற்கு அருகே ஜாலான் பந்தாயில் கடந்த புதன்கிழமை இரவு நிகழ்ந்த இந்த விபத்தைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் அந்த 49 வயது மாதுவை நான்கு நாள் தடுத்து வைப்பதற்கான அனுமதியை நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை வழங்கியது.
இரவு உணவுக்குப் பின்னர் பல்கலைக்கழகம் நோக்கி இரு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த நான்கு மாணவர்களை அந்த மாது ஓட்டி வந்த எஸ்.யு.வி. வாகனம் மோதியது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மற்றொரு மாணவர் காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.








