நீலாய், அக்.13 – சாலை விபத்தில் சிக்கிய செம்பனை எண்ணெய் ஏற்றிய டேங்கர் லோரி ஒன்று தீப்பற்றிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையின் எதிர்த்தடத்தில் நுழைந்தது.
இந்த விபத்து இலிட் எனப்படும் வடக்கு-கிழக்கு நெடுஞ்சாலையின் மத்திய இணைப்புத் தடத்தின் 44.6வது கிலோ மீட்டரில் நேற்று நண்பகல் 12.00 மணியளவில் நிகழ்ந்தது.
உள்நாட்டவரான 53 வயது ஆடவர் ஒட்டிய அந்த லோரி கார் ஒன்றுடன் விபத்துக்குள்ளாகி எதிர்த்தடத்தில் நுழைந்தது தொடக்க க் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அப்துல் மாலிக் ஹஷிம் கூறினார்.
மலாக்கா, ஜாசினிலிருந்து கிள்ளான் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த லோரி சாலையின் இடது தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த புரோட்டோன் சாகா காருடன் மோதியுள்ளது. இந்த மோதலின் விளைவாக அந்த கார் பல முறை சுழன்று சாலையின் குறுக்கே நின்றுள்ளது.
அதே சமயம் அந்த லோரி தீப்பற்றிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையின் மையத்திலுள்ள தடுப்புக் கம்பியை மோதி எதிர்த்தடத்தில் சிறிது தொலைவு பயணித்து அவசரத் த்தடத்தில் நின்றுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த விபத்தின் காரணமாக சாலையில் சிதறிய உடைந்த பாகங்கள் மீது மோதியதில் பெரேடுவா பெஸ்ஸா மற்றும் மஸ்டா ரக க் கார்கள் சேதடைந்ததாக கூறிய அவர், விபத்தில் சிக்கி லேசான காயங்களுக்குள்ளான புரோட்டோன் காரின் ஓட்டுநரான 21 வயது பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 43(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








