பத்துமலை அக் 12 ;- அந்த காணொளியில் கூறப்பட்ட மிக முக்கியமான இரண்டாவது குற்றச்சாட்டின் மீது பத்துமலை இந்தியர் செட்டில்மெண்ட் குடியிருப்பு சங்கத்தின் தலைவர் மற்றும் சில குடியிருப்புவாசிகளை விசாரித்ததில் பல விவரங்கள் தெரிய வந்தது.
எங்களுக்கு 60 ஆண்டு கால நில பட்டா உண்டு அதற்கான கால வரை 2046 ல் தான் முடிகிறது? ஏன் இப்பொழுது வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என வாதிடுபவர்கள் பெரும்பாலும் 2013 ம் ஆண்டு கொடுக்கப்பட்ட 99 ஆண்டு உரிம பத்திரத்தை பெற்றுள்ளனர்.
ஆக அந்த 99 வருட காலத்திற்கு உரிமம் வழங்கும் 5A நில உறுதி பத்திரத்திற்கு விண்ணப்பிக்க தங்கள் கையில் உள்ள 60 ஆண்டு கால நில பத்திரத்தை அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் அல்லது அவர்களின் நில உரிமையை மீண்டும் நில அலுவலகத்துக்கு திரும்ப ஒப்படைக்கும் ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும்.
அப்படி ஒப்படைத்தால் மட்டுமே அதே நிலத்தின் மீது இன்னொரு பத்திரத்தை நில அலுவலகத்தால் வெளியிட முடியும் என்பது மலேசியாவில் மட்டுமல்ல சர்வதேச நடைமுறை என்கிறார்கள் சட்டவல்லுனர்கள்.
அப்படியிருக்க, 2046 ல் காலவதியாகும் பத்திரத்தை திரும்ப ஒப்படைத்து, கூடுதலாக 78 ஆண்டுகள் அதாவது 2112 ஆண்டு வரை நில உரிமை பெற்ற மாமேதைகளை தங்கள் முன்னோர்களை, படிகாதவர்கள் அல்லது வயதானவர்கள் என்று சாடுவதா?
அவர்களின் தூர நோக்கு பார்வையை புத்தி கூர்மையை நாம் மெச்சி பாராட்ட வேண்டுமா? . '' காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'' என்கிறது நம் முது மொழி. மந்திரி புசார் அமிருடின் போன்ற ஒரு நம்பிக்கையானவர் நல்லவர் இருக்கும் நேரத்தில், இந்த நிலத்திற்கான உரிம காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுத்ததும் , இங்குள்ள சாலை, கால்வாய், மற்றும் வெள்ள தடுப்பு வசதிகளை மேம்படுத்த எடுத்த நடவடிக்கை சரியானது
அங்கு நாம் விசாரித்த அனைவரும் மந்திரி புசார் அமிருடின் நம்பிக்கையானவர் நல்லவர் என்கிறார்கள். அதே வேளையில் அவர் அத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே, இந்த நிலத்தில் நமக்கு இருக்கும் உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் 69 வயது திரு. வெள்ளைசாமி.
இந்த கிராமத்தை சுற்றி உள்ள எல்லா நிலங்களும் தனியார் நிறுவனங்களால் மேம்படுத்தப் பட்டுவிட்டது. இன்னும் இருபது ஆண்டுகள் உண்டென மெத்தனமாக இருந்தால், மாறிவரும் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளால் இந்த நிலம் நம் கையை விட்டு போய் விடலாம். அதனால் இப்பொழுதே நாம் நமது நில உரிமையை 99 ஆண்டுகளுக்கு நீட்டித்து விட்டோம். புதிய நில பட்டா படி நமக்கு 2112 ஆம் ஆண்டு வரை உரிமை உண்டு என்கிறார் அவர் .
அதனால், நில அலுவலகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தனது முழு ஆதரவு தெரிவித்துக் கொண்டார்.