ஷா ஆலம், அக். 10- இரண்டாவது சிலாங்கூர் வர்த்தக உச்சநிலை மாநாடு (சிப்ஸ்) வரும் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் வழி 100 கோடி வெள்ளி மதிப்பிலான வர்த்தகத்தை பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சியின் வழி (உணவு மற்றும் பானங்கள்) 60 கோடி வெள்ளியும் மருத்துவம் தொடர்பான கண்காட்சியின் வழி 1 கோடியே 50 லட்சம் வெள்ளியும் சிலாங்கூர் விவேக நகர் மற்றும் இலக்கவியல் பொருளாதாரம் கண்காட்சி மூலம் 20 கோடி வெள்ளியும் பரிவர்த்தனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
இதற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிகளின் அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது நிர்ணயிக்கப்பட்ட வர்த்தக இலக்கை அடைய முடியும் என்பதோடு நாட்டின் முதலீட்டு மையம் என்ற அந்தஸ்தையும் மாநிலம் நிலை நிறுத்திக் கொள்ள இயலும் என்று அவர் சொன்னார்.
இந்த சிப்ஸ் மாநாட்டின் முதல் கட்ட நிகழ்வு இவ்வாண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. வெளிநாடுகளிலிருந்து கிடைத்த அபரிமித வரவேற்பின் காரணமாக முதன் முறையாக இந்த மாநாடு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. மேலும், பிராந்திய சந்தையாக சிலாங்கூர் உருவெடுப்பதற்குரிய தளமாகவும் இந்த மாநாடு விளங்குகிறது என்றார் அவர்.
மாநில அரசின் முதலீட்டுக் கரமான இன்வெஸ்ட் சிலாங்கூர் மூலம் நடத்தப்படும் இந்த மாநாட்டின் முதல் கட்ட நிகழ்வு கடந்த ஜூலை மாதம் 25 முதல் 27 வரை நடைபெற்ற வேளையில் அதன் இரண்டாம் கட்டம் அக்டோபர் 16 முதல் 19 வரை நடைபெற உள்ளது.
சிலாங்கூர் தொழிலியல் பூங்கா கண்காட்சி மற்றும் சிலாங்கூர் ஆசியான் வர்த்தக மாநாடு ஆகிய அங்கங்களை உள்ளடக்கிய முதலாம் மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 700 கோடி வெள்ளியைம் தாண்டி 1,220 கோடி வெள்ளி வர்த்தகம் பதிவு செய்யப்பட்டது.








