ஷா ஆலம், அக். 4- வெள்ளம் காரணமாக நேற்றிரவு திறக்கப்பட்ட எட்டு
தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் வெள்ள அகதிகளுக்கு
உதவுவதற்காக எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார்
அறவாரியம் 50,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு உலர் உணவுகள், பெண்களுக்கான நாப்கின்கள்,
பெம்பர்ஸ், கனிம நீர், போர்வை மற்றும் நீரை கொதிக்க வைக்கும் கருவி
உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக
அதன் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
முதல் கட்டமாக இந்த உதவிப் பொருட்களை கம்போங் பாயா ஜெராஸ், ஸ்ரீ பாகி டேவான்
எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நேற்று விநியோகம் செய்தோம். எஞ்சிய ஏழு மையங்களில்
தங்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உதவிகளை வழங்குவதற்காக நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
பொது மக்களுக்கு அவசியம் தேவைப்படும் காரணத்தால் இந்த முறை உதவிப் பொருட்கள் பட்டியலில் நீரை கொதிக்க வைக்கும் சாதனத்தையும் சேர்த்துள்ளோம். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் துயர் துடைப்பு மையங்களில் இருக்கும் வரை அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்
என அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதில் தொகுதி சமூக சேவை மையம் மற்றும் கிராமத் தலைவர்களின் ஒத்துழைப்பை தாங்கள் பெற்றுள்ளதாக அவர் சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
வெள்ளத்திற்குப் பின்னர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகையாக தலா 500 வெள்ளியை வழங்குவோம். அவர்களின் விண்ணப்ப பாரங்கள் முறையாக பூர்த்தி செய்து போலீஸ் புகாரின் நகலையும் இணைக்க வேண்டும்.விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில்
அவர்களுக்கு இரண்டு வார காலத்தில் நிதியுதவி வழங்கப்படும் என்றார் அவர்.








