சிங்கப்பூர், அக். 3 - அரசுப் பணியாளர் என்ற முறையில் விலை மதிப்புமிக்கப் பொருட்களைப் பெற்றது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகள் மற்றும் நீதித் துறைக்கு இடையூறு விளைவித்தது தொடர்பான ஓர் குற்றச்சாட்டை கடந்த வாரம் ஒப்புக்கொண்ட சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு இங்குள்ள உயர்நீதிமன்றம் இன்று 12 மாத சிறைத்தண்டனை விதித்தது.
எதிர்த்தரப்பு மற்றும் அரசுத் தரப்பு நிலைப்பாடுகளுடன் உடன்பட முடியாது என்று தண்டனையை வழங்கும்போது நீதிபதி வின்சென்ட் ஹூங் கூறினார்.
இரு தரப்புகளின் நிலைகளையும் மீறி தண்டனை வழங்குவது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன். இரு தரப்பினரின் வாதத் தொகுப்புகளில் ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொண்டால் அதன் விளைவாக போதுமான தண்டனை கிடைக்காது என்று அவர் தெரிவித்தார்.
தண்டனையைத் தொடங்குவற்கு ஏதுவாக ஈஸ்வரன் வரும் திங்கள்கிழமை (அக்டோபர் 7) நீதிமன்றத்தில் சரணடைவதற்கான எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை நீதிபதி ஹூங் ஏற்றுக்கொண்டார்.
தற்போதைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பெர்னாமா


