ANTARABANGSA

இஸ்ரேல் தாக்குதல்-  தென் லெபனான் இரண்டாவது காஸா ஆகலாம்- ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

28 செப்டெம்பர் 2024, 9:47 AM
இஸ்ரேல் தாக்குதல்-  தென் லெபனான் இரண்டாவது காஸா ஆகலாம்- ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

லண்டன், செப்.  28- இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ் புல்லாவுக்கும் இடையிலான மோதலின் காரணமாக தென் லெபனான் மற்றொரு காஸாவாக மாறக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின்  வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல்  எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்தது.

தென் லெபனானும் மற்றொரு காஸாவாக மாறிக்கொண்டிருக்கிறது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான முரண்பாட்டு மோதலின் போர்க்களமாக அது உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவையின்  79 வது அமர்வில் ஆற்றிய உரையில் போரெல்  கூறினார்.

லெபனானில் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல்-ஈரானிய மோதலை சுட்டிக்காட்டிய போரெல், பரந்த பிராந்தியப் போராட்டத்தில் நாடு  போர்க்களமாக மாறி வருவதாகவும் இதனால் லெபனான் சமூகம் மோதலில் சிக்கித் தவிப்பதாகவும்  தெரிவித்தார்.

இப்பகுதியில் இஸ்ரேல்-ஈரான் மோதல் அதிகரித்து வருவதால் காஸாவின் தலைவிதி லெபனானுக்கும் விரைவில் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாம் ஒரு முடிவற்ற சுழற்சியில் செல்கிறோம். தற்போதைய மோதலின் பாதை  இப்பிராந்தியம் முழுவதும் உறுதியற்ற தன்மையை அதிகப்படுத்தக்கூடும்  என்று அவர் வலியுறுத்தினார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்புக்கும் இடையே நிகழ்ந்து வரும் மோதல்கள் பற்றிப் பேசுகையில், சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்கா இப்பிராந்தியத்தில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தாலும் போர்நிறுத்தத்தை அமல் செய்வதில் அதன் இயலாமையை போரெல் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில வாரங்களுக்கு முன்பு தன்னிடம் இஸ்ரேல் தொடர்பான ஒரு திட்டம் இருப்பதாக அறிவித்தார். ஆனால் இதுவரை  எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று போரெல் கூறினார்.

ஒருபோதும் நடக்காத போர்நிறுத்தத்திற்காக காத்திருப்பதை விட இரு நாடுகளின் தீர்வுக்கான உடனடி முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம் சமாதான வியூகத்தை  மறுமதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசரத் தேவையை அவர் வலியுறுத்தினார்.

நீங்கள் இரு நாடுகளின் தீர்வை உருவாக்க விரும்பினால் போர் நிறுத்தத்திற்காக காத்திருக்க வேண்டாம். இப்போதே வேலை செய்யத் தொடங்குங்கள்.  "முதலில் போரை நிறுத்துங்கள், பின்னர் அமைதியைத் தொடங்குங்கள்" என்ற அணுகுமுறையானது களத்தில் உள்ள யதார்த்தத்தின் அடிப்படையில் பயனற்றது என்று குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.