MEDIA STATEMENT

நெரிசலைக் குறைக்க துறைகமுகங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்- பிரதமர்

27 செப்டெம்பர் 2024, 9:08 AM
நெரிசலைக் குறைக்க துறைகமுகங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்- பிரதமர்

கிள்ளான், செப். 27- துறைமுகங்களில் நெரிசலைக் குறைக்க துறைமுக அடிப்படை வசதிகள் மற்றும் சூழியல் முறை நாடு தழுவிய அளவில் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக மற்றும் முதலீட்டு அதிகரிப்பின் வாயிலாக பல்வேறு தொழில்துறைகளுக்கான போக்குவரத்து மையமாக மலேசியாவை உருவாக்கும் நோக்கத்திற்கு ஏற்ப நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் துறைமுகங்கள் இன்றியமையாத பங்கினை வகிக்கின்றன என்று அவர் சொன்னார்.

கோலக் கிள்ளான் துறைமுகத்தின் வெஸ்ட்போர்ட் உள்பட துறைமுகங்களின் போக்குவரத்து அதிகரிப்பு தொடர்பான விவகாரம் அமைச்சரவைக் கூட்டங்களில் பல முறை கொண்டு வரப்பட்டுள்ளத் தகவலையும் பிரதமர் வெளியிட்டார்.

அரசாங்கத்தைப் பொறுத்த வரை, சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களும் எளிமைப்படுத்தப்பட்டு விரைவுபடுத்தப்பட வேண்டும் என விரும்புகிறோம். ஏனென்றால், நிர்வாக பிரச்சினைகள் காரணமாக நாடு பின்தங்கி விடக்கூடாது என நாங்கள் கருதுகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்கு வெஸ்போர்ட் 2 திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார். இந்நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமருடின் ஷாரி, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜப்ருள் அப்துல் அஜிஸ் வெஸ்ட்போர்ட் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ரூபன் எமிர் ஞானலிங்கம் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த இரண்டாவது வெஸ்ட்போர்ட் நிர்மாணிப்புத் திட்டம் கோலக் கிள்ளான் துறைமுகத்தில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கான சரியான நடவடிக்கையாக விளங்குகிறது என்று அன்வார் சொன்னார்.

பினாங்கு மற்றும் தஞ்சோங் பெலேப்பாஸ் துறைமுகங்களிலும் இதே பிரச்சினை நிலவி வருவதைச் சுட்டிக் காட்டிய அவர், அனைத்துலக கடல்சார் மற்றும் சரக்கு மையமாக உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வெஸ்ட்போர்ட் துறைமுகம் வெஸ்ட்போர்ட் 2 கொள்கலன் முனைய நிர்மாணிப்பின் வாயிலாக தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்யும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.