(ஆர்.ராஜா)
ஷா ஆலம், செப். 25- இந்திய சமூகம் எதிர்நோக்கி வரும் அடையாள
ஆவணங்கள் இல்லாமை மற்றும் கல்வி பிரச்சினைகளுக்கு தீர்வு
காண்பதை இலக்காகக் கொண்டு ‘அறம்‘ எனும் இயக்கம்
தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இப்போது தொடங்கி ஓராண்டு காலத்தில் முறையான
செயல்திட்டங்களுடன் இவ்விரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதை
இந்த ‘அறம்‘ இயக்கம் இலக்காகக் கொண்டுள்ளது என்று ஒற்றுமைத்
துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை குறிப்பாக குடியுரிமை விவகாரத்தை
தாம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்திற்கு கொண்டுச்
சென்றுள்ள வேளையில் உள்துறை அமைச்சின் கவனத்திற்கு இதனைக்
கொண்டுச் செல்ல பிரதமரும் வாக்குறுதியளித்துள்ளார் என்றார் அவர்.
இந்த ‘அறம்‘ இயக்கம் தொடங்கப்படுவது தொடர்பான அறிவிப்பை
நேற்றிரவு தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி வாயிலாக வெளியிட்ட
போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
துணையமைச்சர் பதவியை வகித்து வரும் இந்த 20 மாத காலத்தில்
இந்திய சமூகம் எதிர்நோக்கும் குடியுரிமை மற்றும் கல்வி ஆகிய இரண்டு
முக்கியப் பிரச்சினைகள் தம்மை பெரிதும் பாதித்ததாக சரஸ்வதி கூறினார்.
மலாய்க்காரர் அல்லாதோருக்கும் இந்நாட்டுக் குடியுரிமை வழங்கப்படும்
என்ற வாக்குறுதி சுதந்தரத்தின் போது வழங்கப்பட்டு அது அரசியல்
சாசனத்தில் முக்கிய ஷரத்தாக சேர்க்கப்பட்டப் பின்னரும் கூட
சுதந்திரத்திற்கு முன்பு பிறந்தவர்களின் வாரிசுகளில் பலர் இன்னும்
குடியுரிமை அற்றவர்களாக இருப்பதை தாம் காண நேர்ந்ததாக அவர்
தெரிவித்தார்..
அதே சமயம் வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பல
இடங்களில் ஆரம்பப் பள்ளிக்கு கூட செல்லாத பலர் உள்ளது மிகவும்
வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.
மேலும் ஆரம்பக் கல்வியை முடித்து இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும்
மாணவர்களில் சிலர் கல்வியைத் தொடராமல் பாதியிலே
கைவிடுகின்றனர். இத்தகைய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாக
இருக்கிறது. அவர்களும் கூலித் தொழிலாளர்களாக தங்கள்
வாழ்க்கையைத் தொடர முடியுமே தவிர நல்ல ஊதியத்தில் வேலை
வாய்ப்பு பெறுவது அரிது.
ஆகவே, நமது இனத்தில் அடுத்த தலைமுறையினர் எப்படி இருக்கப்
போகிறார்கள் என்ற சிந்தனையில் இந்த இரண்டு பிரச்சினைகளையும்
முக்கியமானதாக கருத்தில் கொண்டுள்ளேன். ‘அறம்‘ இயக்த்தின்
வாயிலாக குடியுரிமை மற்றும் கல்வி வாய்ப்பு ஆகிய இரு
பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான முயற்சியை நான்
எடுத்துள்ளேன் என அவர் சொன்னார்.
நேற்று இந்திய மக்கள் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது
இவ்விரு பிரச்சினைகளையும் நான் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிமிடம் முன்வைத்தேன். இந்த விவகாரத்தை உள்துறை
அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும்படி என்னைக் கேட்டுக்
கொண்ட பிரதமர் தாமும் இதனை .அமைச்சரின் பார்வைக்கு கொண்டுச்
செல்வதாக தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள குடியுரிமை பெறாதவர்கள் பற்றி தரவுகளைச்
சேகரித்து அதனை உள்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச்
சென்று அவர்களுக்கு உரிய ஆவணங்களைப் பெற்றுத் தருவது மற்றும்
கல்வி வாய்ப்பு பெறாத மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு
உரிய கல்வி வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவது ஆகியவை இந்த ‘அறம்‘
அமைப்பின் தலையாயப் பணியாக உள்ளது என்றார் அவர்.
இந்த பணியை இப்போது தொடங்கி ஓராண்டு காலத்தில் முழுமையாக
செயல்திட்டத்துடன் தீர்வினை ஏற்படுத்தும் முயற்சியில் தாங்கள்
ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், அதற்கு பொது மக்கள் மற்றும் சமூக
அமைப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்
கொண்டார்.








