புத்ராஜெயா, செப். 25 - உயர்கல்வி நிறுவனங்களின் தன்னார்வப் பணி படைப் பிரிவு மூலம் வெள்ளத்திற்குப் பிந்தைய நிவாரணப் பணியை உயர் கல்வி அமைச்சு தொடங்கியுள்ளது. இதில் ஊழியர்கள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய 878 தன்னார்வலர்களை ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக இரண்டு படகுகள், 24 பேருந்துகள், ஆறு லாரிகள், 15 வேன்கள் மற்றும் 17 நான்கு சக்கர இயக்க வாகனங்கள் உட்பட பல்வேறு உபகரணங்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து திரட்டப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு கூறியது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற வளாகங்கள் உள்ளிட்ட பொது கட்டிடங்களை சுத்தம் செய்ய 56 தண்ணீர் ஜெட் கருவிகள் நான்கு தண்ணீர் பம்புகள், மூன்று தண்ணீர் தொட்டிகள் மற்றும் ஒன்பது ஜெனரேட்டர்கள் போன்ற கூடுதல் உபகரணங்களும் பயன்படுத்தப்படவுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனித்தனியாகவும் குழுக்களாகவும் உளவியல் ஆதரவு சேவைகளையும் இந்த பணிக்குழு வழங்கும்.
கெடா மற்றும் பினாங்கு தவிர, பேராக் மற்றும் பெர்லிஸில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கும் நிவாரணப் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால் இதரப் பகுதிகளுக்கும் தன்னார்வலர்களை அனுப்ப அமைச்சு தயாராக உள்ளது.
இந்த முன்னெடுப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதலைத் தரும் என்று அமைச்சு நம்புகிறது என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.








