செய்தி ஆர்.ராஜா
கோலாலம்பூர் செப் 22- மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய தலைவராக தினத்தந்தி இணையதள ஆசிரியர் செ.வே. முத்தமிழ் மன்னன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாட்டிலுள்ள தமிழ்ப் பத்திரிகையாளர்களை பிரதிநிதிக்கும் பிரதான அமைப்பாக விளங்கி வரும் இச்சங்கத்தின் 2024-ஆம் ஆண்டுக் கூட்டம் மற்றும் புதிய தவணைக்கான தேர்தல் கோலாலம்பூர் 'தமிழ்ப் புத்தக ஆலயம்' ஜெயபக்தி மாளிகையில் நேற்று நடைப்பெற்றது.
இத்தேர்தலில் செ.வே. முத்தமிழ் மன்னன் 58 வாக்குகள் பெற்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நம்பிக்கை ஊடகத்தின் தலைமை செயல் முறை அதிகாரி தயாளன் சண்முகத்திற்கு 53 வாக்குகள் கிடைத்தன.
சங்கத்தின் துணைத் தலைவராக 'தமிழ் லென்ஸ்' இணைய ஊடகத்தைச் சேர்ந்த தி. காளிதாசன் வெற்றிபெற்றார். இவருக்கு 62 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட சங்கத்தின் இடைக்கால தலைவர் நா.பார்த்திபன் 50 வாக்குகள் பெற்றார்.
உதவித் தலைவர் பொறுப்பிற்கு ஐவர் போட்டியிட்டனர். இவர்களில், தமிழ் லென்ஸ்' இணைய ஊடகத்தின் நிருபர் இ. காளிதாசன் 89 வாக்குகள், மலேசிய நண்பன் நிருபர் ஜீவா 68 வாக்குகள் , தமிழ் நேசனின் மூத்த புகைப்பட கலைஞர் மு.இரவி 59 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் பதவிக்கு தமிழ் லென்ஸ்' இணைய ஊடக நிறுவனர் வி.வெற்றி வாணன், துணைச் செயலாளர் பதவிக்கு மலேசிய நண்பனின் குணாளன், பொருளாளர் பதவிக்கு தேசிய ஊடகமான பெர்னாமாவைச் சேர்ந்த கிரீஸ் ஆகிய மூவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
163 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் 113 பேர் கலந்துகொண்டு வாக்களித்தனர்.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் இந்த ஆண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற மண்டபம் மற்றும் மதிய உணவை வழங்கினார்.
தேர்தல் அதிகாரி கெப்போங் கிருஷ்ணமூர்த்தி, செராஸ் ஷான் முத்துசாமி ஆகியோர் தேர்தலை முறையாக நடத்தினர்.








