கோத்தா பாரு, செப். 21- இங்குள்ள கம்போங் பாஞ்சியில் இருக்கும் ஜி.ஐ.எஸ்.பி. ஹோல்டிங்ஸ் (ஜி.ஐ.எஸ். பி.எச்.) தலைமை செயல் முறை அதிகாரியின் குடும்ப இல்லம் எனக் கருதப்படும் மூன்று வீடுகளில் கிளந்தான் போலீசார் இன்று அதிரடிச் சோதனை நடத்தினர்.
இன்று அதிகாலை 6.30 மணி தொடங்கி காலை 9.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தின் போலீஸ் குழுவுடன் கிளந்தான் இஸ்லாமிய சமய விவகார இலாகாவின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அந்த மூன்று குடியிருப்புகளிலும் முக்கியப் புள்ளியின் இரண்டாவது மனைவி, 20க்கும் மேற்பட்ட சிறார்கள் உட்பட சுமார் 30 குடியிருப்பாளர்கள் வசிப்பதை இந்த நடவடிக்கையில் பங்கேற்ற பெர்னாமா நிருபர் ஒருவர் கண்டறிந்தார்.
ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டிருந்த ஜி.ஐ.எஸ் பி.எச். தொடர்பான பல்வேறு புத்தகங்கள் மற்றும் ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் சில புத்தகங்கள் எரிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் கண்டனர்.
இதற்கிடையில், கிளந்தான் உட்பட பல மாநிலங்களில் இன்று பெரிய அளவில் சோதனை நடவடிக்கை நடைபெற்றதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடினைத் தொடர்புகொண்டபோது தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கை குறித்த விரிவான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.








