அலோர்ஸ்டார், செப். 21 - கெடாவில் வெள்ளத்திற்குப் பிந்தைய உதவி பணிகளுக்காக மத்திய அரசு 1 கோடியே 30 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த நிதி உதவி, துப்புரவு பணிகள் மற்றும் வெள்ளத்தில் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை சீரமைக்க பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
இந்த நிவாரண நிதியில் 30 லட்சம் வெள்ளி கோத்தா ஸ்டார் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெள்ளத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகளை நிவர்த்தி செய்வதற்கு எஞ்சிய ஒரு கோடி வெள்ளி பயன்படுத்தப்படும்.
உடனடி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா), அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு (ஐ சி.யு.) மற்றும் கெடா மாநில செயலாளர் அலுவலகம் ஆகியவற்றைக் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
கெடா சமய இடைநிலைப் பள்ளியில் உள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு (பிபிஎஸ்) வருகை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.








