MEDIA STATEMENT

செந்தோசா தொகுதிக்கு 600 தீபாவளி ஷோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகள் ஒதுக்கீடு- குணராஜ் தகவல்

21 செப்டெம்பர் 2024, 7:20 AM
செந்தோசா தொகுதிக்கு 600 தீபாவளி ஷோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகள் ஒதுக்கீடு- குணராஜ் தகவல்

(ஆர்.ராஜா)

கிள்ளான், செப். 21- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செந்தோசா தொகுதிக்கு 600 ஷோம் ஷோப்பிங் இலவச பற்றுச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் தெரிவித்தார்.

தலா 200 வெள்ளி மதிப்பிலான அந்த 600 பற்றுச்சீட்டுகளை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு வரும் 23ஆம் தேதி திங்கட்கிழமை இறுதி நாளாக இருந்தாலும் அதன் பிறகு வரும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும் என்று அவர் சொன்னார்.  

இந்த இலவசப் பற்றுச் சீட்டை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வோர் மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுபவர்களாகவும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம், எஸ்.எம்.யு.இ. எஸ்.எம்.ஐ.எஸ். ஆகிய திட்டங்களின் உதவி பெறாதவர்களாகவும் இருப்பது அவசியம் என அவர் தெரிவித்தார்.

பெருநாள் சமயத்தில் வசதி குறைந்தவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டத்தை சிலாங்கூர் மாநிலம் மட்டுமே அமல்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், உண்மையாகவே உதவி தேவைப்படுவோர் மட்டுமே இந்த திட்டத்தின் வாயிலாக பயன் பெறுவதை உறுதி செய்ய தாம் விரும்புவதாகச் சொன்னார். 

நானும் சிலாங்கூர் வாக்காளர் எனக் கூறிக் கொண்டு உதவி பெறுவதற்கு வரிசையில் நிற்காமல் ஏழ்மை நிலையிலுள்ளவர்கள் வாய்ப்பினை பெறும் வகையில் ஒதுங்கியிருக்கும்படி சமுதாயத்தில் வசதி உள்ளத் தரப்பினரை அவர் கேட்டுக் கொண்டார்.

90,000 வாக்காளர்களைக் கொண்ட செந்தோசா தொகுதியில் 50 முதல் 60 விழுக்காட்டு வாக்காளர்கள் இந்தியர்களாக இருந்தாலும் இத்தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 600 பற்றுச் சீட்டுகள் போதுமானவையாக இல்லை என அவர் கூறினார்.

செந்தோசா தொகுதியில் 90,000 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 50 முதல் 60 விழுக்காட்டினர் இந்திய வாக்காளர்களாவர். அந்த இந்திய வாக்காளர்களில் 20 விழுக்காட்டினர் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் என்றாலும் சுமார் அந்த எண்ணிக்கை 9,000 பேராக இருக்கும். ஆயினும் இத்தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 600 பற்றுச் சீட்டுகள் போதுமானவையாக இல்லை. இருந்தாலும், தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பற்றுச்சீட்டுகள் உண்மையாகவே சிரமத்தில் உள்ளவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்றார் அவர்.

.இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு 44 லட்சம் வெள்ளி செலவில்  22,000 இலவச பற்றுச் சீட்டுகளை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் வசதி குறைந்தவர்களுக்கு இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.