கோலாலம்பூர், செப். 21- ரவாங், பண்டார் கன்றி ஹோம்ஸ் பகுதியில்
உள்ள குளோபல் இக்வான் ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட்
(ஜி.ஐ.எஸ்.பி.எச்.) நிறுவனத்துடன் தொடர்புடையவை என சந்தேகிக்கப்படும்
வர்த்தக மையங்கள் மீது சிலாங்கூர் மாநில காவல் துறை இன்று காலை
அதிரடிச் சோதனை மேற்கொண்டது.
அதிகாலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை
நடவடிக்கையில் சிலாங்கூர் மாநில காவல் துறையைச சேர்ந்த 200
உறுப்பினர்களோடு கூட்டரசு சேமப்படை, சிலாங்கூர் இஸ்லாமிய இலாகா
(ஜாய்ஸ்) மற்றும் செலாயாங் நகராண்மைக் கழக அதிகாரிகளும் பங்கு
கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது சோதனையிடப்பட்ட வளாகங்களில்
ஜி.ஐ.எஸ்.பி.எச். பெயர் பொறிக்கப்பட்ட கிளினிக், உணவகம், கார்
பழுதுபார்ப்பு பட்டறை, பேரங்காடி, பேக்கரி, ஊடக தகவல் சேவை
மையம், ஹோட்டல், அழகு சாதனக் கூடம் ஆகியவையும் அடங்கும்.
சம்பந்தப்பட்ட பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் பெர்னாமா
மேற்கொண்ட ஆய்வில் சிறார்கள் உள்பட அங்குள்ளவர்களிடம் காவல்
துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதைக் காண முடிந்தது.
அதே சமயம், அனுமதியின்றி கட்டப்பட்ட சில வளாகங்களை செலாயாங்
நகராண்மை கழக அமலாக்கப் பிரிவினர் உடைக்கும் மற்றும் கடைகளுக்கு
சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது பண்டார் கன்றி ஹோம்ஸ்,
ஜாலான் டேசா பகுதி முழுமையாக மூடப்பட்டது.



