அலோர் ஸ்டார், செப். 21- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கு கெடா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வருகை புரிய விருக்கிறார்.
இந்த குறுகிய கால வருகையின் போது அவர் மாநிலத்தில் வெள்ள நிலைமையை ஆய்வு செய்யவுள்ளதோடு சுல்தான் அப்துல் ஹலிம் அரங்கம், கெடா சமயப் பள்ளி மற்றும் தித்தி காஜா தேசிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக துயர் துடைப்பு மையங்களுக்கும் வருகை புரிவார்.
இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கெடா மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் உள்ள 42 துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடி இருப்பவர்களின் எண்ணிக்கை 7,494 பேராக உயர்ந்துள்ளது. நேற்றிரவு 8.00 மணிக்கு இந்த எண்ணிக்கை 6,760 பேராக இருந்தது.
வெள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கெடா மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி நேற்று கூறியிருந்தார்.
துயர் துடைப்பு மையங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் இதர அரசு துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தலைவருமான அவர் தெரிவித்தார்.








