செர்டாங், செப். 17- இங்குள்ள மலேசிய விவசாய கண்காட்சி மையத்தில் (மேப்ஸ்) நடைபெறும் 2024 ஆம் ஆண்டு மலேசியா விவசாயம், தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலா கண்காட்சியில் (மஹா) இடம்பெற்றுள்ள சிலாங்கூர் பெவிலியனுக்கு சிலாங்கூர் ராஜா மூடா இன்று வருகை புரிந்தார்.
காலை 11.00 மணிக்கு இங்கு வந்தடைந்த தெங்கு அமீர் ஷாவை கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு டத்தோ ரிஸாம் இஸ்மாயில் வரவேற்றார்.
உள்ளூர் தொழில்முனைவோரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படும் அக்ரோட்ரேட் கண்காட்சி நிலையத்திற்கு அவர் முதலில் வருகை தந்தார்.
அதன்பிறகு, மலேசிய கால்நடை மருத்துவத் துறையின் கால்நடை மேம்பாடு கண்காட்சியையும், மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐபிபி) வளாகத்தையும் பார்வையிட்ட அவர், இறால் மீன்பிடி நடவடிக்கைகளையும் கண்டு களித்தார்.
மலேசிய மீன் மேம்பாட்டு வாரியத்தின் காட்சிக்கூடத்திற்கு வருகை புரிந்த தெங்கு அமீர், பின்னர் நன்னீர் மீன் குளங்கள் மற்றும் மீன் வளர்ப்பு கேலரியை பார்வையிட்டார்.
வெனிலா பிளானிஃபோலியா, கெலுலுட் தேன், உயர்தர தானிய சோளம், சிலாங்கூர் முலாம்பழம், தேங்காய், அன்னாசிப்பழங்கள் மற்றும் வேளாண் சுற்றுலாத் தயாரிப்புகள் போன்ற மாநில உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியைப் பார்வையிட்டதுடன் சிலாங்கூர் பெவிலியனுக்கான வருகையை ராஜா மூடா முடித்துக்கொண்டார்.
முப்பது லட்சம் பார்வையாளர்களை ஈர்ப்பதையும் 600 கோடி வெள்ளி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மஹா 2024 கண்காட்சி இலக்காகக் கொண்டுள்ளது.








