அலோர் ஸ்டார், செப். 17- கோல கெடா கடலோரப் பகுதியில் அலைகள்
ஐந்து மீட்டர் வரை உயர்ந்ததைத் தொடர்ந்து லங்காவி-கோல கெடா-
லங்காவி தடத்திற்கான பத்து படகுச் சேவைகள் இன்று நிறுத்தப்பட்டன.
லங்காவி- கோல கெடா இடையே சேவையை மேற்கொள்ளும் நான்கு
படகுகளை உட்படுத்திய இந்த சேவை நிறுத்தத்தால் 2,154 பயணிகள்
பாதிக்கப்பட்டதாக ஃபெர்ரிலைன்ஸ் வென்ஞ்சர்ஸ் சென் பெர்ஹாட்
நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கேப்டன் டாக்டர் பாஹ்ரின் பாஹ்ரோம்
கூறினார்.
லங்காவியிலிருந்து கோல கெடாவுக்கான காலை 10.30 மணி, நண்பகல்
12.00 மணி பிற்பகல் 1.00 மணி மற்றும் 1.30 மணிக்கான சேவைகள் ரத்து
செய்யப்பட்டன. அதே சமயம் கோல கெடாவிலிருந்து லங்காவிக்கான
ஆறு பயணச் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் 1,791 பயணிகளுக்கு
பாதிப்பு ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட பயணிகள் பயணக் டிக்கெட்டுகளுக்கான தொகையைத்
திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அல்லது பயணத் தேதியை மாற்றிக்
கொள்ளலாம் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கடலில் நீர் மட்டம் பாதுகாப்பான நிலைக்குத் திரும்பியவுடன் கோல
பெர்லிஸ் படகுத் துறையிலிருந்து கூடுதல் சேவைகள் மேற்கொள்ளப்படும்
என்று அவர் குறிப்பிட்டார்.








