கோத்தா கினாபாலு, செப். 17 - மலேசிய தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டத்தில் அன்புக்குரிய நாட்டின் மீது தங்களின் அன்பை வெளிப்படுத்துவதற்காக வயது, இன மற்றும் மத வேறுபாடின்றி அனைத்து நிலைகளையும் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாடாங் மெர்டேக்காவில் நேற்று ஒன்று திரண்டனர்.
மலேசியா உருவான 61வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில்
"மலேசியா மடாணி: ஜீவா மெர்டேக்கா" என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வில் மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
கடந்த 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி இதே பாடாங் மெர்டேக்காவில் மலேசியா பிரகடனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் மீண்டும் அனுசரிக்கப்படும் மலேசிய தின விழாவில் கலந்து கொள்வதற்காக மாலை 5 மணி முதல் மக்கள் ஒன்றுகூடத் தொடங்கினர்.
விழா இரவு 8.30 மணிக்கு தொடங்கிய நிலையில் கன மழைக்கு மத்தியிலும் பாடாங் மெர்டேக்காவில் குழுமியிருந்த பார்வையாளர்கள் ஒரு அங்குலமும் அசையவில்லை.
விருந்தினர்கள் வருகை மற்றும் முக்கிய நிகழ்வின் தொடக்கத்திற்கு முன்னர் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக கலை நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன. இந்நிகழ்வு தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இந்த விழாவில் சபா யாங் டிபெர்த்துவா நெகிரி துன் ஜுஹார் மஹிருடின் மற்றும் அவரது மனைவி தோ புவான் நார்லிடா ஆர்.எம்.ஜஸ்னி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜி முகமது நூர், சரவா முதல்வர் டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி ஓபேங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் மற்றும் மத்திய மற்றும் மாநில அமைச்சர்களும் இயில் பங்கேற்றனர்.
மலேசிய தினம் 2024 கொண்டாட்ட முதன்மைக் குழுத் தலைவரும் தகவல் தொடர்பு அமைச்சருமான ஃபாஹ்மி பாட்சில், இணைத் தலைவரும் சபா சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோ கிறிஸ்டினா லியூ மத்திய மற்றும் மாநில அரசுத் துறைத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.








