ஷா ஆலம், செப். 17- புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயா, தாமான் தாசேக் தாமான் ஜெயாவில் நேற்று நடைபெற்ற மலேசிய தின விழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பல்லின, கலாசார மற்றும் சமயப் பின்னணியைக் கொண்ட மக்களிடையே நிலவும் ஒற்றுமையைப் போற்றும் நோக்கில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜீவ் கூறினார்.
முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வு. தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையில் மட்டுமின்றி பல்லின மக்களுக்கும் இடையே அணுக்கமான உறவை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் இந்தியர்கள் மட்டுமின்றி மலாய் மற்றும் சீன சமூகத்தினரும் கலந்து கொண்டதோடு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டு போட்டிகளிலும் பங்கு கொண்டனர் என்றார் அவர்.
காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் உள்நாட்டுப் பழங்களின் விநியோகம், மலேசிய கொடியை அடிப்படையாகக் கொண்டு கேக்கினை அழகுப்படுத்துவது, பாரம்பரிய பலகாரங்களை வழங்குவது போன்ற அங்கங்களும் இடம் பெற்றன என்றார் அவர்.
இது தவிர பல்லாங்குழி, கேரம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என அவர் தெரிவித்தார்.








