ஈப்போ, செப். 16- வேகக் கட்டுப்பாட்டை இழந்த இரட்டை மாடி சுற்றுலா பேருந்து சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானத்தில் ஓட்டுநர் உள்பட அதில் பயணம் செய்த 34 காயமடைந்தனர்.
இவ்விபத்து பிளாஸ் எனப்படும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 23.5வது கிலோ மீட்டரில் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் இன்று விடியற்காலை 1.10 மணியளவில் தாங்கள் தகவலைப் பெற்றதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அகமது கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஈப்போ தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்புக் குழு சிம்பாங் பூலாய், மேரு ராயா, தம்புன் ஆகிய தீயணைப்பு நிலைய உறுப்பினர்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
இந்த விபத்தில் அந்த பேருந்தின் கீழ்த்தளத்தில் இருந்த மூன்று பயணிகள் இருக்கைகளுக்கு இடையில் சிக்கி கடுமையாகக் காயமடைந்ததாகக் கூறிய அவர், மேல் தளத்தில் இருந்த 30 பயணிகள் லேசான காயங்களுக்குள்ளானதாகத் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த பயணிகளை சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இவ்விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான மூன்று பயணிகள் சிகிச்சைக்காக ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் எஞ்சிய 31 பேருக்கு சுகாதார அமைச்சின் பணியாளர்கள் சம்பவ இடத்தில் முதலுதவி வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.








