கோல லங்காட், செப். 16- தஞ்சோங் சிப்பாட் சட்டமன்றத் தொகுதி ஏற்பாடு செய்துள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவையின் வாயிலாக 3,000க்கும் மேற்பட்டோர் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த சேவையின் வழி தொகுதி மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதை எளிதாக்கியுள்ளது என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
இந்த திட்டம் தஞ்சோங் சிப்பாட் தொகுதி மக்களுக்கு குறிப்பாக தனியார் ஆம்புலன்ஸ் வசதியைப் பெறும் வசதி இல்லாத குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்காக பிரத்தியேகமாக தொடங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
வழக்கமாக நோயாளிகளை மருத்துவனைக்கு கொண்டுச் செல்வதற்கும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கும் தொடர் சிகிச்சை பெறுவோருக்கும் இந்த ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது என்றார் அவர்.
இத்தொகுதி மக்களுக்கு மிக அருகில் உள்ள மருத்துவமனை பந்திங் மருத்துவமனையாகும். மருத்துவமனையை அடைய சுமார் 30 நிமிடம் தேவைப்படும். தனியார் ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தினால் அதிக செலவு பிடிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள கம்போங் பத்துவில் டீம் சிலாங்கூரின் மலேசிய தின மோட்டார் சைக்கிள் அணிப் பயணத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு கிடைத்து வரும் ஆதரவைக் கருத்தில் கொண்டு மேலும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை சேவையில் ஈடுபடுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
தஞ்சோங் சிப்பாட் தொகுதிக்கு அப்பால் இருந்தும் ஆம்புலன்ஸ் சேவைக்காக அழைப்புகளை நாங்கள் பெறுகிறோம். எனினும் வெளியூர் என்பதால் அந்த அழைப்புகளை நிராகரிக்க வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு ஏற்படுகிறது என்றார் அவர்.
இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பெற விரும்பும் தஞ்சோங் சிப்பாட் மக்கள் 03-31481029, 011-23513004 அல்லது 018-4658184 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.








