(ஆர்.ராஜா)
ஷா ஆலம், செப். 16- தீபாவளியை முன்னிட்டு தலா 200 வெள்ளி மதிப்பிலான இலவச ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளுக்கு இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கி விண்ணப்பிக்கலாம் என்று பண்டமாரான் தொகுதி அறிவித்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காகக் கொண்ட இந்த திட்டத்தில் பங்கு கொண்டு பயன்பெறும்படி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் தக் சீ தனது பேஸ்புக் பதிவில் கேட்டுக் கொண்டார்.
இந்த தீபாவளி இலவச ஷோம் ஷோப்பிங் இலவச பற்றுச்சீட்டுகளுக்கு இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கி விண்ணப்பம் செய்யலாம். இத்தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பற்றுச் சீட்டுகள் முடியும் வரை இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மாநில அரசின் உதவித் திட்டங்களான எஸ்.எம்.யு.இ., எஸ்.எம்.ஐ.எஸ். மற்றும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டத்தில் பங்கு பெறாத தொகுதி மக்கள் இந்த பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் சொன்னார்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக குடும்ப வருமானம் பெறுபவர்களாகவும் பண்டமாரான் தொகுதி வாக்காளர்களாகவும் இருப்பது அவசியம் என அவர் கூறினார்.
இந்த பற்றுச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்வோர் கணவர் மற்றும் மனைவியின் அடையாளக் கார்டு, சம்பள விபர அறிக்கை ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும்.
இந்த பெருநாள் கால ஷோம் ஷோப்பிங் திட்டம் தொடர்பில் மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் 03-31631139 என்ற எண்களில் அல்லது 017-2241139 என்ற வாட்ஸ்ஆப் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு 44 லட்சம் வெள்ளி செலவில் 22,000 இலவச பற்றுச் சீட்டுகளை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் வசதி குறைந்தவர்களுக்கு இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும்








