MEDIA STATEMENT

மின்னியல் கழிவுகளை பதப்படுத்தும் ஆறு வளாகங்களில் போலீஸ் சோதனை- வெ.4.15 கோடி பொருள்கள் மீட்பு

16 செப்டெம்பர் 2024, 5:45 AM
மின்னியல் கழிவுகளை பதப்படுத்தும் ஆறு வளாகங்களில் போலீஸ் சோதனை- வெ.4.15 கோடி பொருள்கள் மீட்பு

கோலாலம்பூர், செப். 16- சட்டவிரோதமான முறையில் இரும்பு, பிளாஸ்டிக் மற்றும் மின்னியல் கழிவுகளை பதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஆறு வளாகங்கள் மீது  போலீசார்  கடந்த வியாழக்கிழமை அதிரடிச் சோதனை நடத்தினர்.

பண்டமாரான் மற்றும் கிள்ளான் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் 4 கோடியே 15 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு உலோகப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் 2,900 கிலோ ஸ்டென்லெஸ் ஸ்டீல், 83,700 கிலோ அலுமினியம், 6,000 கிலோ எஃகு மற்றும் திட இரும்பு, 30,000 கிலோ பிளாஸ்டிக், 103 கிலோ கேபிள்கள், 50 மின்-கழிவு பதனீட்டு இயந்திரங்கள் 14 போக்குவரத்து சாதனங்கள் ஆகியவையும் அடங்கும். 

இந்த சோதனை நடவடிக்கையில் 22 முதல் 60 வயது வரையிலான ஆறு உள்நாட்டினரும் 43 வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ முகமது யூசுப் மாமாட் கூறினார்.

இந்த வர்த்தக நடவடிக்கைகள் வாயிலாக கிடைக்கும் லாபத்தை வசூலிக்கும் ஒருங்கிணைப்பாளர்களாக அந்த ஆறு உள்நாட்டினரும் செயல்பட்டு வந்துள்ளதாக நம்பப்படுகிறது  என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

லைசென்ஸ் இல்லாத மற்றும் பதிவு செய்யப்படாத அந்த வளாகங்கள் லட்சக்கணக்கான வெள்ளியை லாபமாக ஈட்டியுள்ளதாக நம்பப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த வர்த்தக வளாகங்கள் மீது நடத்தப்பட்டச் சோதனையில் அவை பல்வேறு குற்றங்களைப் புரிந்துள்ளதும் கண்டறியப்பட்டது. உலோகப் பொருள்களை பதப்படுத்தப்படுத்துவதற்கு தேவையான முறையான ஆவணங்களைக் கொண்டிராததும் அவற்றில் அடங்கும் என்றார் அவர்.

நச்சுப் பொருள்கள் அடங்கிய மின் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை பதப்படுத்தும் நடவடிக்கைகள்  கடுமையான உடல் நலப் பிரச்சினைகளை உண்டாக்கும் என்று அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.