ஷா ஆலம், செப். 16- தேசிய கல்விக் கொள்கை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.
கடந்தாண்டு மொத்தம் 10,177 மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வில் அமராதது மற்றும் படித்தல், எழுதுதல், கணிதம் ஆகியவற்றில் காணப்படும் பிரச்சினைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மறுஆய்வு பரிந்துரை முன்வைக்கப்படுவதாக அவர் சொன்னார்.
உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காடீர் மற்றும் கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் ஆகியோருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் வாயிலாக இந்த தரவுகள் கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
ஆறாம் ஆண்டு (தொடக்கப் பள்ளி) மற்றும் மூன்றாம் படிவத்திற்கான (இடைநிலைப்பள்ளி) தேர்வுகள் இல்லாமல் ஐந்தாம் படிவத் தேர்வை மட்டும உள்ளடக்கியுள்ள தற்போதையக் கல்விக் கொள்கையை அவசியம் மறு ஆய்வு செய்தாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு மஇகாவின் 78வது தேசிய பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்தப் பின்னர் தேசிய முன்னணித் தலைவருமான அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
மாணவர்கள் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளாக மாறாமலிருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அரசாங்கம் மற்றும் தலைமைத்துவம் மாறினாலும் கல்விக் கொள்கை எந்த மாற்றமும் இன்றி எப்போதும் சீராக இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும் என்றார் அவர்.
அரசாங்கமும் தலைவர்களும் மாறினாலும் பாதகமில்லை. மாணவர்கள் பலிகடா ஆகாமலிருப்பதை உறுதி செய்ய கல்விக் கொள்கை எப்போதும் உறுதியானதாகவும் நிலையானதாகவும் இருப்பது அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வை எழுதுவதற்கு தங்களைப் பதிந்து கொள்ளாமல் கல்வியை பாதியில் கைவிடும் போக்கு வளர்ந்த நாடாக மலேசியாவை உருவாக்கும் முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.








