கோலாலம்பூர், செப். 16- உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணையமைச்சர் பவுஸியா சாலே கெஅடிலான் ராக்யாட் கட்சியின் (கெஅடிலான்) புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்கு பதிலாக பவுஸியா ஏற்றுள்ள இந்த பொறுப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக கட்சியின் உதவித தலைவர் நிக் நஸ்மி நிக் அஜிஸ் கூறினார்.
உள்துறை அமைச்சரான சைபுடின், பக்கத்தான் ஹராப்பான் தலைமைச் செயலாளர், கெஅடிலான் கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினர் மற்றும் கூட்டணி அரசின் ஆலோசக மன்ற உறுப்பினர் ஆகியப் பதவிகளில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக இந்த பொறுப்பினை துறப்பதாக அவர் சொன்னார்.
கட்சியின் முக்கியப் பதவிகளை விரிவான அளவில் மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று கூடிய கட்சியின் மத்திய தலைமைத்துவ உச்சமன்றக் கூட்டத்தில் இந்த பதவி மாற்றம் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதை இந்த நடவடிக்கை நோக்கமாக கொண்டுள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
பவுஸியா வகித்து வந்த பகாங் கெஅடிலான் தலைமைத்துவ மன்றத் தலைவர் பொறுப்பை ரிஸால் ஜாமின் ஏற்கவுள்ளார். பேராக் மாநில கெஅடிலான் மாநிலத் தலைவர் பதவியை கட்சியின் உதவித் தலைவர் சாங் லீ காங்கிடமிருந்து முகமது ஹைருள் அமிர் சப்ரி ஏற்கவிருக்கிறார் என்று அவர் நிக் நஸ்மி குறிப்பிட்டார்.
பேராக் மாநில கெடிலான் துணைத் தலைவர் பதவியை முகமது அஸ்லான் ஹெல்மி ஏற்கவிருக்கிறார். இந்த புதிய நியமனங்கள் அனைத்து உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று அவர் சொன்னார்.
கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் நுருள் இசா அன்வார், பவுஸியா, பொருளாளர் வில்லியம் லியோங், கெஅடிலான் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் முகமது காமில் முனிம், கெஅடிலான் மகளிர் பிரிவு துணைத் தலைவர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி ஆகியோரை உறுப்பினர்களாகவும் சைபுடினை ஆலோசகராகவும் கொண்ட கெஅடிலான் மத்திய தலைமைத்துவ மன்றத்தை உருவாக்குவதற்கும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.








