கோலாலம்பூர், செப் 13: ஒரு சமுதாயம் கட்டுக்கோப்புடன் ஒன்றிணைந்து ஒரே திசையை நோக்கிப் பயணிக்கும் போதே அது எண்ணிய இலக்கை சுலபமாக எட்ட முடியும். அதற்கு வழிகாட்டியாக அல்லது பிரச்சனைகளை களைய அதற்கு ஒரு தலைமை தேவை. துரதிஷ்டவசமாக நம்மவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின், இருந்த தொழிற்சங்கத் தலைமைத்துவத்தை கூட இழந்து விட்டனர் என்றால் மிகையாகாது.
எந்த விஷயத்திலும் இந்தியர்களிடையே ஒரு மித்த கருத்தின்றி வாழ்ந்தது, அவர்கள் அனைவரும் ஒரே பிரச்சனையில் சிக்கி இருந்தாலும், வெவ்வேறு கோணங்களிலிருந்து பிரச்சனையை நோக்கியதே நமக்குள் வேற்றுமையை உருவாக்கியது .
இதனால் அவர்களின் பொது எதிரி சுலபமாகத் தப்பிக்கவும், தங்களுக்குள் மோதிக்கொள்ளும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொண்டனர்.
அதுவே வேற்றுமைக்கும் , நம் சமுதாய அழிவிற்கும் முக்கிய காரணமானது. உதாரணமாகச் சுதந்திர மலேசியாவில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வேண்டும் என்ற குழுவின் பிடிவாதத்தால், ஒரு பிரிவினர் கொடுக்கப்பட்ட 3 1/2 ஏக்கர் நிலத்தைப் புறக்கணித்தனர். அது ஒரு தேசிய நிலை பகிஷ்கரிப்பு இல்லை, ஒரு குறுகிய வட்டத்தில், சிறு பிரிவினரின் செயல் என அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்ல நமக்கு ஆளில்லை.
தோட்டத் தொழிலாளர் அனைவருக்கும் இந்த 3 1/2 ஏக்கர் நிலத்தைக் கொடுக்க வேண்டும் என்று அன்று தேசிய நிலையில் அரசாங்கத்தை வற்புறுத்த தீரமின்றித் திறனின்றி இருந்ததால் , செல்வம் கொழிக்கும் சுதந்திர மலேசியாவில். இன்று வரை இந்தியச் சமுதாயம் மட்டுமே ஆண்டி கோலம் பூண்டுள்ளது.
அதே வேளையில் இந்தியர்களை விட பெரிய சமுகமான சீனர்களும் , மலாய்க்காரர்களும் அவர்கள் எதிர்நோக்கிய பெரிய சவால்களை எளிதில் சமாளித்தார்கள், சுதந்திர மலேசியாவில் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தேவையான கொள்கை வகுத்தார்கள். அதில் வெற்றியும் பெற்றனர். இதற்கு முக்கியக் காரணமாக விளங்கியது அவர்களின் ஒற்றுமை மற்றும் தூரநோக்கு சிந்தனையுடன் கூடிய அரசியல் பலம்.
ஒற்றுமையற்ற இந்தச் சமுதாயத்தின் இன்னல்களை அகற்ற , பல பொதுநலவாதிகள் இந்தியச் சமூகத் தலைவர்கள் அங்கங்கே உருவெடுத்தனர். பல மாதிரி சேவைகளையும் வழங்கி வந்துள்ளனர். சிலர் அரசியல் கட்சிகளின் வழியும், வேறு சிலர் அரசு சார்பற்ற அல்லது பொது நலச் சங்கங்களின் வழியும் தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அதிகார வர்க்கத்தின் அங்கீகாரம் கொடுக்கப் படவில்லை . இதனால் பல இடங்களில் இந்தியச் சமுதாயம் எடுப்பார் கைப்பாவையாக இருக்க நேரிட்டது.
நாடு நீண்ட நாட்கள் ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததால் இந்தியர்களின் பல பிரச்சனைகள் கேட்பாரின்றி கிடந்து புண் புரையாகியது, அதுவே இன்றைய அரசுக்குத் தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு சிலாங்கூர் மற்றும் மூன்று மாநிலங்களில் பக்காத்தான் மக்கள் கூட்டணி ஆட்சி அமைந்ததால் மக்கள் தேவைகளின் குரல் சற்று ஓங்கி ஒலித்தது. முதல் முறையாகப் பதவிக்கு வந்த பொழுது, இந்தியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்ப்பது மிகச் சிக்கலாக இருப்பதை அக்கூட்டணி உணர்ந்தது.
இந்தியச் சமுதாயத்திற்குத் தலைமைத்துவத்தை ஏற்படுத்தச் சிறிய முயற்சி
சிலாங்கூரில் பக்காத்தான் ராயாட் என்ற மக்கள் கூட்டணி அதன் ஆட்சியில் சில மாற்றங்களை முன்னெடுத்தது அதில் ஒன்றுதான் இந்திய சமூக தலைவர் பொறுப்புக்கு ஆர்வமும், சேவை மனப்பான்மை கொண்ட பொது மக்களை அப் பதவிகளுக்கு பரிந்துரைப்பது.
அதனால் ஆரம்பத்தில் சிலாங்கூரில் 30 பேர் கொண்ட kki என்னும் இந்தியச் சமூக தலைவர் நியமனத்தைத் தொடங்கியது. அதன் நோக்கம் இந்தியர்களை ஒன்று படுத்துவது மட்டுமின்றி அந்தத் தலைமைத்துவத்தை அரசாங்க இலாக்காக்களும் அங்கீகரிக்க வேண்டும் என்பதாகும். மாநில அரசு திட்டங்களையும் இந்திய சமூகத் தலைவர்கள் மூலம் மக்கள் அறிந்து கொள்ளவும் பயனடையவும் வழி அமைப்பதும் அதன் நோக்கமாக இருந்தது.
இன்று அது 60 தலைவர்களாக மலர்ந்துள்ளது. அதன் சேவையும் தேவையும் கூடக் காலத்திற்கு ஏற்ப சிறிது மாற்றம் கண்டுள்ளது.


