கூடாட், செப்.1- இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை மேற்கொள்ளப் பட்ட ஓப் திரிஸ் 3.0 நடவடிக்கையில் 496 பேர் கைது செய்யப் பட்டதோடு 8 கோடியே 11 லட்சம் வெள்ளி மதிப்புள்ள கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மானிய விலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே காலகட்டத்தில் 29,487 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு 2,005 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸாம் முகமது அலி கூறினார்.
டீசல், ரோன் 95 பெட்ரோல், ஒரு கிலோ பாக்கெட் சமையல் எண்ணெய், திரவ பெட்ரோலிய எரிவாயு, கோதுமை, மற்றும் ஒரு கிலோ சீனி பொட்டலங்கள் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மானிய விலை பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதில் ஓப் திரிஸ் 3.0 முக்கிய பங்கினை ஆற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களின் துணையுடன் இத்தகைய சோதனை நடவடிக்கைகளை அமைச்சு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் மேலும் சொன்னார்.
இன்று இங்கு செந்தோஹான் காசே மற்றும் பயனீட்டு விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் காப்போர் சட்டமன்ற உறுப்பினர் சென் சோங்கும் கலந்து கொண்டார்.
கடந்த மாதம் 23ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாயில் உள்ள மூன்று இடங்களில் அரச மலேசிய போலீஸ் படையுடன் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில் சமையல் எண்ணைய் மோசடிக் கும்பலின் நடவடிக்கையை அமைச்சு முறியடித்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.








